Monday, December 19, 2011



























பண்டிகைகள், திருவிழாக்கள், நாளும் கிழமையுமான விசேச நாட்கள்
குறித்தான மதிப்பும், அக்கறையும் இருக்கும் வரை வாழ்க்கை அர்த்தமுடனும்
உயிர்ப்புடனும் இருக்கும் எனத் தோன்றுகிறது.

(கடந்த கார்த்திகைத் தீப பண்டிகைக்காக தன் இரு மகள்களுடன்
ரோட்டோரக்கடையில் அகல் விளக்கை  ரோட்டில் உட்கார்ந்து வாங்கும் அந்த அக்கறையும் ஈடுபாட்டையும் கவனிப்பது முக்கியம்.)

Wednesday, November 30, 2011

கனவும் நிஜமும்























என்றோ கனவில் பார்த்த இடம்
நேரில் பார்த்த இடத்தைவிட
நன்றாக ஞாபகமிருக்கிறது இன்னும்.
நேரில் பார்த்த இடம்
கனவில் பார்த்த மாதிரிகூட
நினைவில் இல்லை
இப்போது.

(நேற்றிரவு தூங்கும் போது தோன்றின கவிதை)?

Wednesday, November 09, 2011

திருப்பூரை திருப்பி போட்ட பெருமழை


உலகிலேயே ஆற்றில் தண்ணீர் ஓடுவதை கும்பல் கும்பலாக, குடும்பம் குட்டியோடு ஆர்வமாகவும், ஆச்சர்யமாகவும், பரவசமாகவும் வேடிக்கை பார்த்தவர்கள் திருப்பூர் மக்களாகத்தான் இருப்பார்கள் என நினைக்கிறேன்.
அவர்களை குறைசொல்வதற்கு ஒன்றுமில்லை. பல வருடங்களாக பொய்த்துப்போன மழையாலும் எந்நேரமும் நஞ்சும் நாற்றமுமாக ஓடிக்கொண்டிருந்த நொய்யல் ஆற்றையே பார்த்து சலித்து, முகம் சுளித்துப்போன திருப்பூர் வாசிகளுக்கு இந்த வெள்ளம் ஆர்வம், ஆச்சர்யம், பரவசம் அளித்ததில் வியப்பேதுமில்லை. உண்மையில் ஊருக்கு நடுவே ஆறு ஓடுவது எவ்வளவு
கொடுப்பினையான விஷயம். அதுவும் பெரும் வரலாறு கொண்ட நொய்யலை என்ன கதிக்கு ஆளாக்கியிருக்கிறார்கள் இவ்வூர் சாயப்பட்டறை முதலாளிகள் என்பதை நாடறியும்.

வெள்ளம் பெருக்கெடுத்து ஓடிய திங்கள் கிழமை காலை நானும்  நின்று ஆர்ப்பரித்து ஓடிய நீரை வெகு நேரம் பார்த்துக்கொண்டிருந்தேன். ஆற்றின் கரையோரம் வசித்த ஏகப்பட்ட மக்களை, வீடுகளை, கால்நடைகளை காவு வாங்கியபடியேதான் வந்ததென்றாலும் ஆற்றின் தவறா அது?

Sunday, October 09, 2011

மதுப்பழக்கத்தை நிறுத்திய மழைத்துளி


ஒரே ஒரு மழைத்துளி என் இருபத்தியோரு வருட மதுப்பழக்கத்தை நிறுத்தியது.

(இப்போதைக்கு இவ்வளவுதான்)

Wednesday, August 31, 2011

பழனி மலையின் அடிவாரத்தில் ஒரு நாள்





கடந்த ஞாயிற்றுக்கிழமை (28.08.11) காலையிலே நணபர்களுடன் கிளம்பினோம்.
பழனி தாண்டி நெய்க்காரப்பட்டியையும் தாண்டி கரடிக்கூட்டம் ரோட்டிலே (ஊர்ப்பெயர்களை கவனிக்கவும்) சென்றால் மலையடிவாரத்தில் 7 ஏக்கர் கரும்புத்ேதாட்டம் வாங்கியிருக்கிறார் நண்பரின் நண்பர்.

அந்த தோட்டத்தில் அன்று கிடா வெட்டு. இடம், சூழல், காற்று என எல்லாமே அற்புதமாக இருந்தது.
சற்றே நடந்து எட்டி ஏறிவிடும் தூரத்தில் இருந்தது மலை. வெகு நேரம் மலையையே பார்த்துக்கொண்டிருந்தேன். அப்படி அவ்வளவு நேரம் பார்க்க அதில் என்ன இருக்கிறது என்று உடன் வந்த நண்பர்கள் கேட்டார்கள். நான்
பதிலேதும் சொல்லவில்லை. பதில்சொல்லக்கூடிய நண்பர்கள் உடன் வரவில்லை.
சுற்றி சுற்றி நடந்து வந்தேன். காற்றை முடிந்த மட்டும் நுரையீரலில் சேமித்துக்கொண்டேன்.
ஒரு சிறு ஓலைவேந்த வீடு காவல்காரருக்கு அந்த தோட்டத்தில் இருந்தது. அவருக்கு துணையாக இரண்டு வாட்டசாட்டமான நாட்டு நாய்கள் இருந்தன. எதற்கு என கேட்டபோது இரவில் காட்டுப்பன்றிகள் வரும்போது
இந்த நாய்கள் தான் துரத்தியடிக்கும் எனவும், காட்டுப்ன்றிகளை வேட்டையாட
போகும் போதும் இந்த நாய்கள்தான் பெரும் உதவியாக இருக்கும் எனவும் சொன்னார்கள். மேலும் யானைகள் நிறைய வரும் என சொன்னபோது கரும்பையெல்லாம் விட்டுவைக்காதே என நான் கேட்டபோது இந்த காட்டுல அந்த யானைங்க எடத்துல வந்து நாம பயிர்செய்யறோம் அதுகளுக்கு போன மிச்சம்தான் நமக்கு என்றார்.
நாள்முழுவதும் அங்கேயே இருந்தோம். நிறைய சாப்பிட்டு அரட்டையடித்து படுத்து தூங்கி எல்லாவற்றையும் மறந்து ஏதோ தனி உலகத்தில் இருந்த மாதிரி
இருந்துவிட்டு வேறு வழியில்லாமல் ஊர் நோக்கி வந்து வீட்டில் படுத்த போது
நேரம் நள்ளிரவு தாண்டியிருந்தது. மனம் மட்டும் மலையைநோக்கி பறந்தபடியே இருந்தது.


Saturday, August 06, 2011

தமிழ் ஸ்டுடியோ :: குறும்படம் | Thamizh Studio :: Short Film

தமிழ் ஸ்டுடியோ :: குறும்படம் | Thamizh Studio :: Short Film


சா.கந்தசாமி எழுதிய இந்த அற்புதமான சிறுகதையை, வஸந்த் ஓரளவுக்கு

சிறப்பாகவே எடுத்திருந்தாலும் என் கற்பனையில் உள்ள அந்த ஏரி, அந்த சிறுவன், அந்த தாத்தா அந்த மீன்கள் எல்லாமே வேறு வேறாக இருக்கின்றன.

Saturday, July 16, 2011

என்ன மாதிரியான காலத்தில் வாழ்கிறோம் நாம்?
















வருடாந்தோரும் மும்பை மக்களுக்கு தீபாவளி வருகிறதோ இல்லையோ கட்டாயம் குண்டு வெடிப்பு தவறாமல் வருகிறது. வழக்கம் போல பிரதமர், அமைச்சர்கள் வன்மையாக கண்டிக்கிறோம், தீவிர வாதத்தை இனியும் பொறுத்துக்கொள்ளமாட்டோம், மக்கள் அனைவரும் அமைதிகாக்கவேண்டும்
என்ற செத்துப்போன வார்த்தைகளையே திரும்பத்திரும்ப, ஒவ்வொருமுறையும் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். உருப்படியாக செய்ய கையாளாகாத அரசியல் வாதிகளால் இந்த உப்புசப்பில்லாத வார்த்தைகளைத்தவிற வேறென்னதான் செய்யமுடியும்?

ஊடகங்கள் அதற்கு மேல். ஒவ்வொரு முறை குண்டுவெடிப்பின் பிறகும் உடனடியாக ஒரு அட்டவணை போடுவார்கள். இந்த ஆண்டில், இந்த தேதியில்
இத்தனை உயிர்கள் பலி என்று அட்டவணையில் சேர்ப்பதற்காகவே குண்டு வெடிப்பை பார்ப்பார்கள். அட்டவணைதான் நீண்டுகொண்டே போகிறது.
எது எதற்கோ போராடும், அலைந்து திரியும் ஊடகங்கள் இம்மாதிரியான சந்தர்ப்பங்களில் அரசியல்வாதிகளின் சட்டையைப்பிடித்து கேள்வி கேட்க்க என்றுமே முனைந்ததில்லை. குண்டு வெடிப்பில் பலியான, காயம்பட்ட மனிதர்களின் ரத்தக்கறை காயும்முன் வேறு செய்திகளுக்கு தாவிவிடுவார்கள்.
குண்டுவெடிப்பின் சோகத்தினூடே சினிமாக்காரர்களுக்கு ஏதாவது நேர்ந்தால் உடனடியாக அவ்விஷயத்திற்குள் தாவிவிடவும் தயங்கமாட்டார்கள்.

மற்ற எல்லாவற்றையும் விடுங்கள். எனக்கு இந்த மக்களை நினைத்தால்தான் பெருங்கோபம் வருகிறது. குண்டு வெடித்த 12 மணி நேரத்திற்குள் மும்பை மக்கள் சகஜ நிலைக்கு திரும்பிவிட்டார்கள் என்ற செய்தியைத்தான் மனம் நம்ப மறுக்கிறது. இது எப்படி சாத்தியமாகிறதென்றும் தெரியவில்லை. தங்களின் வாழ்க்கைக்கு, உயிர்களுக்கு என்றுமே உத்தரவாதமில்லாத ஒரு மாநிலத்தில் வாழ்கிறோம் என்ற கவலை, அச்சம், கோபம் என எதுவுமில்லாமல் ஒரு விலங்கு வாழ்க்கைபோல வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். தொடர்ச்சியாக ஒவ்வொருமுறையும் கொத்துக்கொத்தாக மனித உயிர்கள் உருத்தெரியாமல்
சிதைந்து போவதை எப்படி ஒன்றுமே நடக்காதது போல் இருக்கிறார்கள் எனப் புரியவில்லை. ரத்தமும் சதையும் நகர வீதிகளில் சிதரிக்கிடப்பதை பார்த்துவிட்டு அடுத்த 12 மணி நேரத்திற்குள் வழக்கமான வேலைகளில் மனிதர்கள் ஈடுபடுவதை எப்படி புரிந்துகொள்வதென்று தெரியவில்லை. அந்த அளவுக்கு மனிதர்களின் மனம் ஈரமற்று போய்விட்டதா? அல்லது நமக்கென்ன, நமக்கு நேராதவரை நாம் ஏன் கவலைப்பட வேண்டும் என்ற அலட்சியமா?

ஆனால் ஒவ்வொருமுறையும் பலியானவர்களுக்கு கூட்டம் கூட்டமாக தவறாமல் அஞ்சலி செலுத்துகிறார்கள். மெழுகுவர்த்தி ஏந்தி கண்ணீர் மல்க நிற்கிறார்கள். அதையே ஏன் அவர்கள் ஒரு பெரும்போராட்டமாக முன்னெடுத்து செல்லக்கூடாது? இரண்டு மூன்று நாட்களுக்கு நகரம் ஸ்தம்பிக்கும்படி ஏன் போராட்டங்களை நீட்டிக்ககூடாது? தெலுங்கானா தனிமாநிலம் கேட்டு ஆண்டுகணக்கில் போராட்டங்கள் நடைபெறவில்லையா?

ஊழல் என்ற ஒற்றை வார்த்தைக்கு அன்னா அசாரேயுடன் சேர்ந்துகொண்டு என்ன மாதிரியெல்லாம் போராடுகிறார்கள்? உயிர்களைவிட ஊழல்கள் பெரிதாகிவிட்டது நாட்டில்.

நாடும் நாட்டு மக்களும் நாசமாகப்போகட்டும்.












நன்றி தினமணி

Wednesday, July 13, 2011

மொழி


















இதைவிட அன்புததும்பும், கண்ணில்நீர் வரச்செய்யும் ஒரு கவிதையையோ
கதையையோ எழுதிவிடமுடியுமா எவராலும்?




















பயணம்?
















வண்டி மட்டுமா குடைசாய்ந்து கிடக்கிறது?

Monday, April 25, 2011

புத்தக திருட்டு



















அப்பாவிடமிருந்து ஏற்பட்டதுதான்
புத்தகம் படிக்கும் பழக்கம்.
பள்ளிக்கூட வாழ்வின் இறுதி நாட்களில்
ஆரம்பித்த இந்த இலக்கிய பரிச்சயம் (பயித்தியம்)
தொட்டு தொடர்ந்து மெல்ல மெல்ல
நேரம், பணம், எதிர்காலம் என
எல்லா விதத்திலேயும் இழந்தாயிற்று
பெரும்பாண்மையான வாழ்வை.

வாங்க இயலாத காலங்களில்
ஆரம்பித்தது திருடும் பழக்கம் .
நூலகங்களில், நணபர்கள் வீட்டில்,
புத்தகக் கடைகளில், கண்காட்சிகளில் என...

சட்டை தூக்கி வயிற்றில் சொருகி
பிள்ளை சுமக்கும் பெண்ணாய்
வலியை அனுபவித்ததுண்டு
நிறைய நாட்களில்.

வயிற்றில் சொருக வசதியாய்
சாப்பிடாமல் கூட போவதுண்டு.
புத்தகம் மேலே தெரியாமல் இருக்க
நூலகம் போகும் போதெல்லாம்
அண்ணனின் சட்டைதான் அடைக்கலம் தரும்.
முட்டிதொடும் சட்டையை
அவமானமாகக் கருதியதே கிடையாது
கல்லூரி படிக்கும் காலத்திலும்.

தினத்துக்கு சராசரியாக
இரண்டு புத்தகங்கள் என
மெல்ல மெல்ல
என்வீடு ஆனது நூலகமாய்...

புத்தகங்களோடு திரும்பும்
எந்த ஒரு நாளும்
அன்போடு,
அன்போடு என்ன
சோறே போட்டதில்லை அம்மா.
" பொழைகிற வழியைப்பாக்காம
அப்பனும் புள்ளையுமா சொத்து சேக்கரானுங்க"

இதே புத்தகத்தால்
எனக்கும் அப்பாவுக்குமான
ஒரு கார்த்திகை தீபத்தின்
மழை இரவுசண்டையில்
போதுமடா சாமி
என்ன பொழப்பு இதுவென
மொத்தமும் விட்டு விட்டு (மனசில்லாமல்)
ஊர்தாண்டி ஊர் வந்தாயிற்று
அம்மா சொன்ன மாதிரி
பொழைக்கிற வழியைப்பார்த்து.

ஆண்டுகள் கடந்த நிலையில்
எதேச்சையாய் அண்மையில்
அனைத்து புத்தகங்களையும்
ஒரு சேர பார்க்கும் வாய்ப்பு
அமைந்ததது.
எலும்புத்துண்டு பார்த்த நாயாய்
அலைந்தது மனம்.

மறுபடியும்
வேதாளம் முருங்கைமரம் ஏறியது.
ஊருக்கு போன சமயம்
வெகுநாட்களாக போகமலிருந்த
நூலகங்களில் புதுப்புத்தகங்களின்
வருகை அதிகரித்திருந்தது.

வழக்கமாய் சட்டை தூக்கி
வயிற்றில் இரண்டு சொருகும்போது
விட்டுப்போன பழக்கத்தால்
ஒரு பக்கம் விலா இழுத்துக்கொண்டது.

வீடும் கனவுகளும்...




















இன்னும் வாழ ஆசைப்படும் பாட்டி.
தன் நாட்களில் வீடுகட்டும்
வெகுநாள் கனவில் அப்பா.
தன் மடியில் தவழ ஏங்கும்
பேரன் கவலையுடன் அம்மா.
என்றாவது ஒரு வேலை கிடைத்தே தீரும்
என்ற நம்பிக்கையில் அண்ணன்.
திருமணக்காட்சியை தினமும்
கனவிலேயே நடத்திப்பார்க்கும் அக்கா.
எப்படியும் அவள் எனக்குத்தான்
என்று இன்றைய சந்திப்பில் நான்.
இந்த வருடமாவது பள்ளி சுற்றுலாவுக்கு
சென்றுவிட வேண்டுமென்று
மும்முரமாய் அப்பாவிடம் முயலும் தம்பி.
இப்படியான கனவுகளில் மட்டுமே
இதுவரையிலும்
இனியும் நகரும்
என் வீடு.


12.06.1996

Thursday, April 21, 2011


சிதைவு (3)





















நிறைய குழம்புகிறேன்
நினைவிழந்து போகிறேன்.
எதிரே வரும் வாகனங்களிடம்
வசவுகள் வாங்குகிறேன்
நண்பனை ஊருக்கு பஸ் ஏற்றிவிட்டு
அன்றிரவே அவன் இருக்கிறானா என
அவன் வீடு சென்று கேட்கிறேன்.
பாதிப்புணர்தலில் எழுந்து
இரண்டாம் காட்சி சினிமாவுக்குப்போகிறேன்,
முடியும்முன்பே எழுந்து
வீட்டுக்கு வருகிறேன்.
நண்பர்களுக்கு கடிதம் எழுதி
முகவரிமாற்றி அனுப்பிவிட்டு
இரவில் துணுக்குருகிறேன்.
சவரம் செய்த நேற்றிரவு
கன்னத்தை பிளேடால் ஆழ
கிழித்துக்கொண்டேன்.
நிறையநாட்கள்
நிலையின்றி தவிக்கும் பல்வேறு தருணங்கள்
நிறைய குழம்புகிறேன்
நினைவிழந்து போகிறேன்...

06.07.1995

கனவுலகம்






















கிட்டத்தட்ட ...
பெரும்பாலும்
அதைப்பற்றி யாரிடமும் யாரும் சொல்வதில்லை.
அப்படியே சொன்னாலும்
"நேத்துகூட நீங்க கனவுல வந்தீங்க" என
பொதுவான விஷயமாகத்தான் 
சொல்ல முடிகிறது.
நேரில் பார்க்கும் சந்தர்ப்பத்திலோ
பேசமுடிகிற சந்தர்ப்பத்திலோ
கனவில் என்ன விதமாக 
எந்த நிகழ்வில் வந்தாரென
எப்போதும் எந்தகாலத்திலும் யாரும்
சொன்னதில்லை, சொல்லப்படப்போவதுமில்லை
என்பதைவிட சொல்லவே முடியாது 
என்பதுதான் நிஜமாக இருக்கிறது.
நடைமுறையில், நிஜத்தில்
நினைத்துக்கூட பார்க்கமுடியாத விஷயங்களை,
உறவுகளோடு ஏற்படும் "உறவை"
என்னவென்று யாரிடம் எப்படி சொல்வது?
மறக்கமுடியாத துயர சம்பவங்கள் நேர்நதால்
கெட்ட கனவுமாதிரி நினைத்து 
மறந்துவிடச்சொல்லுவார்கள்.
சில ஏற்கவியலாத கனவுகளைக்கூட
அப்படித்தான் செய்யவேண்டும் போல...


03.12.2006


சிதைவு (2)


எங்கு போனது எனது சந்தோஷங்கள்?
எப்போதுமில்லாத அளவுக்கு
சூழலின் நெருக்கடிகள்
நெஞ்சை நெருக்குகின்றன.
வீடு, காதல், வேலை, எதிர்காலம் என
அனைத்துவகையிலுமான ஒரு பயத்தில்
கூனிக்குறுகிக்கொண்டிருக்கிறது
வாழ்நாட்கள்.
எங்கு போனது எனது சந்தோஷங்கள்?
எதனால் இப்படி ஆனது வாழ்வு?
பூவின்மேல் போய் அமரும்
வண்ணத்துப்பூச்சியைப்போல
ஆறுதல் தேடி அலையும் மனசுக்கு
ஒரு இடம் இல்லை இங்கு.
அன்பாக பேசவோ
குறைந்தபட்சம் ஒரு புன்னகை புரியவோகூட
ஒருவரும் இல்லாதமாதிரியாகிவிட்டது.
தோளில்கைபோட்டு
கண்ணீரை சொல்லி நடக்க
நெருங்கிய நண்பன் கூட
தொலைதூரத்தில் இருக்கிறான்.
ஆறுதலாய் இருந்த
தோழியின் நட்பிலும்
விழுந்துவிட்டது ஒரு இடைவெளி.
கடந்துவந்த இத்தனை காலத்திலும்
சொல்லிக்கொள்ளும்படியாக
ஒரு நிகழ்வுகளும் இல்லை இதுவரையில்.
இனியாவது நிகழுமா
மீதமிருக்கிற வாழ்வும்
இப்படியேதான் கடக்குமா...?

10.05.1997

ஜன்னலும் அடிவானத்துப்பறவையும்

















இன்னும் எத்தனை நாளைக்குத்தான்
இந்த கம்பியிட்ட ஜன்னலோடு
கண் பூத்துப்போக
வெளியே வெறித்துக்கொண்டும்
கனவு கண்டுகொண்டும்
காத்துக்கிடப்பது?
நேற்றிரவு இதே ஜன்னலின் அருகில்
உட்கார்ந்திருந்தபோது
தெருவில் பெண்ணழைப்பு ஊர்வலம்
வெகு அமர்க்களமாய் நடந்துபோனது.
அடுத்ததெருவீட்டுப்பையன்
இந்த ஜன்னலை திரும்பிப்பார்க்காமல்
சமீப நாட்களாய்போவதேயில்லை.
ஜன்னலின் அருகே
எப்போது வந்தமர்ந்தாலும்
ஏதாவதொரு பறவை
வெகு தூரத்தில் அடிவானத்துக்கருகில்
பறந்துகொண்டிருக்கும்.
இப்போதுமொரு பறவை
பறந்துகொண்டிருப்பது இங்கிருந்து
மங்கலாகத்தான் தெரிகிறது.