Wednesday, November 30, 2011

கனவும் நிஜமும்























என்றோ கனவில் பார்த்த இடம்
நேரில் பார்த்த இடத்தைவிட
நன்றாக ஞாபகமிருக்கிறது இன்னும்.
நேரில் பார்த்த இடம்
கனவில் பார்த்த மாதிரிகூட
நினைவில் இல்லை
இப்போது.

(நேற்றிரவு தூங்கும் போது தோன்றின கவிதை)?

Wednesday, November 09, 2011

திருப்பூரை திருப்பி போட்ட பெருமழை


உலகிலேயே ஆற்றில் தண்ணீர் ஓடுவதை கும்பல் கும்பலாக, குடும்பம் குட்டியோடு ஆர்வமாகவும், ஆச்சர்யமாகவும், பரவசமாகவும் வேடிக்கை பார்த்தவர்கள் திருப்பூர் மக்களாகத்தான் இருப்பார்கள் என நினைக்கிறேன்.
அவர்களை குறைசொல்வதற்கு ஒன்றுமில்லை. பல வருடங்களாக பொய்த்துப்போன மழையாலும் எந்நேரமும் நஞ்சும் நாற்றமுமாக ஓடிக்கொண்டிருந்த நொய்யல் ஆற்றையே பார்த்து சலித்து, முகம் சுளித்துப்போன திருப்பூர் வாசிகளுக்கு இந்த வெள்ளம் ஆர்வம், ஆச்சர்யம், பரவசம் அளித்ததில் வியப்பேதுமில்லை. உண்மையில் ஊருக்கு நடுவே ஆறு ஓடுவது எவ்வளவு
கொடுப்பினையான விஷயம். அதுவும் பெரும் வரலாறு கொண்ட நொய்யலை என்ன கதிக்கு ஆளாக்கியிருக்கிறார்கள் இவ்வூர் சாயப்பட்டறை முதலாளிகள் என்பதை நாடறியும்.

வெள்ளம் பெருக்கெடுத்து ஓடிய திங்கள் கிழமை காலை நானும்  நின்று ஆர்ப்பரித்து ஓடிய நீரை வெகு நேரம் பார்த்துக்கொண்டிருந்தேன். ஆற்றின் கரையோரம் வசித்த ஏகப்பட்ட மக்களை, வீடுகளை, கால்நடைகளை காவு வாங்கியபடியேதான் வந்ததென்றாலும் ஆற்றின் தவறா அது?