Thursday, December 30, 2010

தலைப்பு தேவைப்படாதவைகள்...

நான் பார்க்க இயலாதெனினும்
எனக்குப்பிடிக்குமென
இத்தனை தூர
இடைவெளியில்
தேர்க்கோலம் போடும்
மனசு.

........

நினைவில் நிழலாய்
தொடர்கையில்
அர்த்தம் இல்லை
பிரிவு என்பதில்.

......

உன்
நினைவு வெள்ளத்தில்
மூழ்கித்தத்தளிக்கிறது
மனம்.

.......

தட்டாரப்பூச்சியை
துரத்தும் சிறுவனென
என் நினைவைத்
துரத்திக்கொண்டிருக்கிறாய்
நீ.


..........


புற்றெழும் பாம்பென
எழுகிறதுன் ஞாபகம்.
படமெடுத்து விரியும் நினைவு
எவ்வித ஆறுதல் மகுடிக்கும்
அடங்க மறுக்கிறது.

........


கோவில் தாண்டி
பாதை கடக்கையில்
தெரிந்தோ தெரியாமலோ
உரசிப்பொறிகிளப்பிப் போய்விட்டான்.
பற்றி எரிந்து கொண்டிருக்கிறது
இரவில் என்
தனிமைக் காடு.

..............


நாயே என்று 
எவரையும் பேசிட 
தயக்கமாக இருக்கிறது.
எல்லாவிதமான 
விலைஉயர்ந்த ஏ.சி. கார்களின்
பின்புற இருக்கையின்மீது
நம்மைப்பார்த்து
நக்கலாக தலையாட்டிப் போகின்றன 
விதவிதமான
பொம்மை நாய்கள்.


............


ஆசைப்படும் நேரத்தில்
இருக்கும்
மனம்
நிறைவேறும் தருணத்தில்
இருப்பதே இல்லை.


.........


காலாகாலமாக
மனிதர்களுக்கு
அடுத்தபடியாக
"ஊர்ல..... எப்படி" என
அதிகமும் குசலம்
விசாரிக்கப்பட்டது
மழையாகத்தான்
இருக்கும் போல.


..................


பயணம் செய்யும்
நெடுஞ்சாலைகளில்
தொலைவில் நிற்கும்
பெருமரங்களின்
நிழலைக் கண்டால்
சட்டெனச் சென்று
மரத்தின் மடியில் படுத்து
சற்றே இளைப்பாறிவிட்டு
திரும்புகிறது
மனம்.


...........


விளையாடி விளையாடி களைத்து,
விளையாடின இடத்திலேயே
படுத்து உறங்கிப்போன மகளை
அருகில் கிடந்த பலூன்
காற்றில்
தொட்டு தொட்டு
எழுப்பிக் கொண்டிருக்கிறது
மறுபடியும் விளையாட.


...................



நிகழாமலிருக்கவே 
விரும்புகிறோம்.
நிகழ நினைப்பதேயில்லை.
நிகழ்வதை நினைத்தாலே
பதருகிறது.
நிகழப்போவதை ஏறக்குறைய
தவிற்கவே விரும்புகிறோம.
ஆனாலும்
நிகழ்ந்தபிறகு நிகழ்வை
ஏற்றுக்கொண்டு 
"தலைக்கு வந்தது தலப்பாவோடு போச்சே" என
சமாதானமாகி மறந்தும்
போகின்றோம்.


..........................


பகல் கடந்து 
மெல்ல மெல்ல 
இரவு வருவது மாதிரி
வயதாகிக்கொண்டு வருகிறது.


.......................


ஒரு பத்து நாள்
பழைய வாழ்க்கையை
வாழ வாய்த்தால்
எவ்வளவு நான்றாக இருக்கும்.?





பொருள் வரின் பிரிவு





















பக்கத்துப் பகுதி
குடியிருக்கும் வீட்டில்
ஒலியும் ஒளியும்
ஓடிக்கொண்டிருந்த
இருளத்துவங்கிய நேரம்
வீட்டைப்பற்றின
நினைவு தொடர்ந்தது.
வழக்கம் போல
சாய்வு நாற்காலியில் அப்பாவும்,
எப்போதும் தரையிலேயே
அமரும் அம்மாவும்,
முற்றத்து தூணில்
சாய்ந்து அண்ணனும்,
தெருவிலிருந்து நான்கைந்து
பேராவது வந்து
கதவின் ஓரமாக நின்றுகொண்டும்,
முடியும் முன்பே தூங்கிவிடும்
எதிர்வீட்டுக்குழந்தையும் - ஆக
இன்னேரம் வீட்டில் பார்ப்பார்கள்
ஒலியும் ஒளியும்.
முடிந்தவுடன் சாப்பாடு மற்றும்
பின்னிரவு பேச்சுகள்.
தொடர்ச்சியாய் கிளைபிரிந்து
பின்னிரவுதாண்டியும் நீண்டு
கொண்டிருந்தது நினைவு.
வீடு, சுற்றம், ஊர், காதலி நண்பர்கள் என
விலகியிருக்கும்போதுதான்
புரிகிறது
அனைத்தின் அருமையும்.

28.06.1996

பேசுதல் குறித்து...(4)















இருவருக்கும்
மனம் பாரமாயிருந்த அப்போதைக்கு
முன்னிரவு நேரமாக இருந்தது.
ஆசுவாசம் தேடிய நாம்
ரயில்வே ஸ்டேஷன் பக்கமாக நடந்தோம்.
பிளாட்பாரத்தில் ஆங்காங்கே
நின்றுகொண்டும், உட்கார்ந்து கொண்டும்,
நடந்துகொண்டுமாக
சிதறிக்கிடக்கிறார்கள் மனிதர்கள்.
உட்கார இடம் தேடி நடக்கிறோம.
ஒரு சிகெரட் வாங்கி
உனக்கு பிடிக்காதபோதும்
பற்றவைத்துக்கொண்டேன்.
நாம் போவதற்கு முன்பிருந்தே
எரியாமலிருந்த அந்த மின்கம்ப விளக்கு
நாம் உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்த
வெகு நேரத்திற்குப்பிறகே எரிய ஆரம்பித்தது.
ஆட்கள் அதிகமற்ற இடத்தில்
அமர்ந்திருந்தோம்.
மறுபடியும் மின்விளக்கு அணையாதா
என நீ எதிர்பார்த்தபடியே
சற்றைக்கெல்லாம் நின்றுவிட்டது அது.
ஒரு நிமிடம் சுற்றிப்பார்த்த நீ
சட்டென்று என் தோள் பக்கம் சாய்ந்து
உட்கார்ந்தாய்.
சற்றே ஆறுதலாய் இருந்திருக்கும் உனக்கு.
பார்வையும், பிரக்ஞையும்
எதில் நிலைத்திருந்தது
எனத்தெரியாத நிலையிலிருந்தேன் நான்.
என்றாலும் காற்றில்
உன் புடவைத்தலைப்பு
என் முகத்திலும், மார்பிலும்
மெத்தென்று பனி படர்வதைப்போல படர்ந்ததுதான்
மிகுந்த ஆறுதலாய்;-
நீ பேசிக்கொண்டிருந்தைதவிடவும்;
தோளில் சாய்ந்ததைவிடவும்
இருந்தது என்க்கு.

Tuesday, December 28, 2010

சாயல்














ஒருவர் மாதிரியே
உலகத்தில் ஏழுபேர்
இருப்பர்களாம்.
ஏழுபேர்களையும் தேடி
உலகைச்சுற்ற
அவசியமில்லாமல்
எங்கள் வீட்டுக்குள்ளேயே
நான், மனைவி, அப்பா,
அம்மா, எதிர்வீட்டு மாமா,
என் நண்பன், மனைவியின் தம்பி
என எல்லோரும்
ஒரே உயரத்துடன் இருந்தது,
ஒரே மாதிரி நின்றிருந்ததது,
ஒரே மாதிரி கைவைத்திருந்தது,
ஒரே மாதிரி உடுத்தியிருந்தது உள்பட
அனைவரும் அச்சு அசலாக
ஒரே மாதிரி இருந்தோம்
என் நான்கு வயது மகள்
வரைந்த ஓவியத்தில்.

பூர்த்தி






















"சார் ஒரு நிமிஷம்" எனக்
கெஞ்சலாகவும், உரிமையாகவும்
வங்கிகளில், தபால் அலுவலகங்களில்
நூலகங்களில், கோவில்களில் என
பல்வேறு இடம் மற்றும் சந்தர்ப்பங்களில்
தொலைபேசி எண் எழுதவோ,
விண்ணப்பம் பூர்த்தி செய்யவோ
கடிதத்தின் முகவரி எழுதவோ,
அர்ச்சனை சீட்டில் பெயரெழுதவோ
ஏன் ஒரு முறை
கண்ணாடி தம்ளரில் ஊற்றின
மதுவைக் கலக்க
சுற்றிலும் தேடியவனுக்கு
எதுவும் கிடைக்காமல்
சட்டென என் சட்டைப்பையில்
கைவிட்டு எடுத்து கலக்கின
நணபன் வரை
எத்தனையோ நபர்களின்
தேவைகளை "பூர்த்தி" செய்திருக்கிறது
என் பேனா.

Friday, December 03, 2010

பேசுதல் குறித்து... (3)






















நெடுநேரம்
என்னோடு பேசிக்கொண்டிருந்தவரிடம்
வாய் திறக்காமல்
நான் பேசிய
வார்த்தைகள் மூன்று.
உம் கொட்டியது
ஒன்று.
தலையை இடம்வலமாக மற்றும்
மேலும் கீழுமாக அசைத்தது
இரண்டு.
இடையிடையே
புன்னகைத்தது
மூன்று.




குழந்தை வளர்ப்பில்
எனக்குமுன்னுள்ள சவாலே
என் பிள்ளைகளுக்கு 
பேசக் கற்றுக்கொடுப்பதாகத்தான்
இருக்கும்போல...



இழவு வீடுகளில்
துக்க விசாரிப்பு கூட
மெல்லத் தோள்தொட்டு
கைபிடித்து தன் 
உள்ளங்கையில்
வைத்துக்கொள்ளத்தெரியாமல் 
ஆறுதல் வார்த்தையென்ற பெயரில் 
பேசியே கொல்கிறார்கள் 
மேலும்...