Thursday, December 30, 2010

தலைப்பு தேவைப்படாதவைகள்...

நான் பார்க்க இயலாதெனினும்
எனக்குப்பிடிக்குமென
இத்தனை தூர
இடைவெளியில்
தேர்க்கோலம் போடும்
மனசு.

........

நினைவில் நிழலாய்
தொடர்கையில்
அர்த்தம் இல்லை
பிரிவு என்பதில்.

......

உன்
நினைவு வெள்ளத்தில்
மூழ்கித்தத்தளிக்கிறது
மனம்.

.......

தட்டாரப்பூச்சியை
துரத்தும் சிறுவனென
என் நினைவைத்
துரத்திக்கொண்டிருக்கிறாய்
நீ.


..........


புற்றெழும் பாம்பென
எழுகிறதுன் ஞாபகம்.
படமெடுத்து விரியும் நினைவு
எவ்வித ஆறுதல் மகுடிக்கும்
அடங்க மறுக்கிறது.

........


கோவில் தாண்டி
பாதை கடக்கையில்
தெரிந்தோ தெரியாமலோ
உரசிப்பொறிகிளப்பிப் போய்விட்டான்.
பற்றி எரிந்து கொண்டிருக்கிறது
இரவில் என்
தனிமைக் காடு.

..............


நாயே என்று 
எவரையும் பேசிட 
தயக்கமாக இருக்கிறது.
எல்லாவிதமான 
விலைஉயர்ந்த ஏ.சி. கார்களின்
பின்புற இருக்கையின்மீது
நம்மைப்பார்த்து
நக்கலாக தலையாட்டிப் போகின்றன 
விதவிதமான
பொம்மை நாய்கள்.


............


ஆசைப்படும் நேரத்தில்
இருக்கும்
மனம்
நிறைவேறும் தருணத்தில்
இருப்பதே இல்லை.


.........


காலாகாலமாக
மனிதர்களுக்கு
அடுத்தபடியாக
"ஊர்ல..... எப்படி" என
அதிகமும் குசலம்
விசாரிக்கப்பட்டது
மழையாகத்தான்
இருக்கும் போல.


..................


பயணம் செய்யும்
நெடுஞ்சாலைகளில்
தொலைவில் நிற்கும்
பெருமரங்களின்
நிழலைக் கண்டால்
சட்டெனச் சென்று
மரத்தின் மடியில் படுத்து
சற்றே இளைப்பாறிவிட்டு
திரும்புகிறது
மனம்.


...........


விளையாடி விளையாடி களைத்து,
விளையாடின இடத்திலேயே
படுத்து உறங்கிப்போன மகளை
அருகில் கிடந்த பலூன்
காற்றில்
தொட்டு தொட்டு
எழுப்பிக் கொண்டிருக்கிறது
மறுபடியும் விளையாட.


...................



நிகழாமலிருக்கவே 
விரும்புகிறோம்.
நிகழ நினைப்பதேயில்லை.
நிகழ்வதை நினைத்தாலே
பதருகிறது.
நிகழப்போவதை ஏறக்குறைய
தவிற்கவே விரும்புகிறோம.
ஆனாலும்
நிகழ்ந்தபிறகு நிகழ்வை
ஏற்றுக்கொண்டு 
"தலைக்கு வந்தது தலப்பாவோடு போச்சே" என
சமாதானமாகி மறந்தும்
போகின்றோம்.


..........................


பகல் கடந்து 
மெல்ல மெல்ல 
இரவு வருவது மாதிரி
வயதாகிக்கொண்டு வருகிறது.


.......................


ஒரு பத்து நாள்
பழைய வாழ்க்கையை
வாழ வாய்த்தால்
எவ்வளவு நான்றாக இருக்கும்.?





No comments:

Post a Comment