Monday, April 25, 2011

புத்தக திருட்டு



















அப்பாவிடமிருந்து ஏற்பட்டதுதான்
புத்தகம் படிக்கும் பழக்கம்.
பள்ளிக்கூட வாழ்வின் இறுதி நாட்களில்
ஆரம்பித்த இந்த இலக்கிய பரிச்சயம் (பயித்தியம்)
தொட்டு தொடர்ந்து மெல்ல மெல்ல
நேரம், பணம், எதிர்காலம் என
எல்லா விதத்திலேயும் இழந்தாயிற்று
பெரும்பாண்மையான வாழ்வை.

வாங்க இயலாத காலங்களில்
ஆரம்பித்தது திருடும் பழக்கம் .
நூலகங்களில், நணபர்கள் வீட்டில்,
புத்தகக் கடைகளில், கண்காட்சிகளில் என...

சட்டை தூக்கி வயிற்றில் சொருகி
பிள்ளை சுமக்கும் பெண்ணாய்
வலியை அனுபவித்ததுண்டு
நிறைய நாட்களில்.

வயிற்றில் சொருக வசதியாய்
சாப்பிடாமல் கூட போவதுண்டு.
புத்தகம் மேலே தெரியாமல் இருக்க
நூலகம் போகும் போதெல்லாம்
அண்ணனின் சட்டைதான் அடைக்கலம் தரும்.
முட்டிதொடும் சட்டையை
அவமானமாகக் கருதியதே கிடையாது
கல்லூரி படிக்கும் காலத்திலும்.

தினத்துக்கு சராசரியாக
இரண்டு புத்தகங்கள் என
மெல்ல மெல்ல
என்வீடு ஆனது நூலகமாய்...

புத்தகங்களோடு திரும்பும்
எந்த ஒரு நாளும்
அன்போடு,
அன்போடு என்ன
சோறே போட்டதில்லை அம்மா.
" பொழைகிற வழியைப்பாக்காம
அப்பனும் புள்ளையுமா சொத்து சேக்கரானுங்க"

இதே புத்தகத்தால்
எனக்கும் அப்பாவுக்குமான
ஒரு கார்த்திகை தீபத்தின்
மழை இரவுசண்டையில்
போதுமடா சாமி
என்ன பொழப்பு இதுவென
மொத்தமும் விட்டு விட்டு (மனசில்லாமல்)
ஊர்தாண்டி ஊர் வந்தாயிற்று
அம்மா சொன்ன மாதிரி
பொழைக்கிற வழியைப்பார்த்து.

ஆண்டுகள் கடந்த நிலையில்
எதேச்சையாய் அண்மையில்
அனைத்து புத்தகங்களையும்
ஒரு சேர பார்க்கும் வாய்ப்பு
அமைந்ததது.
எலும்புத்துண்டு பார்த்த நாயாய்
அலைந்தது மனம்.

மறுபடியும்
வேதாளம் முருங்கைமரம் ஏறியது.
ஊருக்கு போன சமயம்
வெகுநாட்களாக போகமலிருந்த
நூலகங்களில் புதுப்புத்தகங்களின்
வருகை அதிகரித்திருந்தது.

வழக்கமாய் சட்டை தூக்கி
வயிற்றில் இரண்டு சொருகும்போது
விட்டுப்போன பழக்கத்தால்
ஒரு பக்கம் விலா இழுத்துக்கொண்டது.

வீடும் கனவுகளும்...




















இன்னும் வாழ ஆசைப்படும் பாட்டி.
தன் நாட்களில் வீடுகட்டும்
வெகுநாள் கனவில் அப்பா.
தன் மடியில் தவழ ஏங்கும்
பேரன் கவலையுடன் அம்மா.
என்றாவது ஒரு வேலை கிடைத்தே தீரும்
என்ற நம்பிக்கையில் அண்ணன்.
திருமணக்காட்சியை தினமும்
கனவிலேயே நடத்திப்பார்க்கும் அக்கா.
எப்படியும் அவள் எனக்குத்தான்
என்று இன்றைய சந்திப்பில் நான்.
இந்த வருடமாவது பள்ளி சுற்றுலாவுக்கு
சென்றுவிட வேண்டுமென்று
மும்முரமாய் அப்பாவிடம் முயலும் தம்பி.
இப்படியான கனவுகளில் மட்டுமே
இதுவரையிலும்
இனியும் நகரும்
என் வீடு.


12.06.1996

Thursday, April 21, 2011


சிதைவு (3)





















நிறைய குழம்புகிறேன்
நினைவிழந்து போகிறேன்.
எதிரே வரும் வாகனங்களிடம்
வசவுகள் வாங்குகிறேன்
நண்பனை ஊருக்கு பஸ் ஏற்றிவிட்டு
அன்றிரவே அவன் இருக்கிறானா என
அவன் வீடு சென்று கேட்கிறேன்.
பாதிப்புணர்தலில் எழுந்து
இரண்டாம் காட்சி சினிமாவுக்குப்போகிறேன்,
முடியும்முன்பே எழுந்து
வீட்டுக்கு வருகிறேன்.
நண்பர்களுக்கு கடிதம் எழுதி
முகவரிமாற்றி அனுப்பிவிட்டு
இரவில் துணுக்குருகிறேன்.
சவரம் செய்த நேற்றிரவு
கன்னத்தை பிளேடால் ஆழ
கிழித்துக்கொண்டேன்.
நிறையநாட்கள்
நிலையின்றி தவிக்கும் பல்வேறு தருணங்கள்
நிறைய குழம்புகிறேன்
நினைவிழந்து போகிறேன்...

06.07.1995

கனவுலகம்






















கிட்டத்தட்ட ...
பெரும்பாலும்
அதைப்பற்றி யாரிடமும் யாரும் சொல்வதில்லை.
அப்படியே சொன்னாலும்
"நேத்துகூட நீங்க கனவுல வந்தீங்க" என
பொதுவான விஷயமாகத்தான் 
சொல்ல முடிகிறது.
நேரில் பார்க்கும் சந்தர்ப்பத்திலோ
பேசமுடிகிற சந்தர்ப்பத்திலோ
கனவில் என்ன விதமாக 
எந்த நிகழ்வில் வந்தாரென
எப்போதும் எந்தகாலத்திலும் யாரும்
சொன்னதில்லை, சொல்லப்படப்போவதுமில்லை
என்பதைவிட சொல்லவே முடியாது 
என்பதுதான் நிஜமாக இருக்கிறது.
நடைமுறையில், நிஜத்தில்
நினைத்துக்கூட பார்க்கமுடியாத விஷயங்களை,
உறவுகளோடு ஏற்படும் "உறவை"
என்னவென்று யாரிடம் எப்படி சொல்வது?
மறக்கமுடியாத துயர சம்பவங்கள் நேர்நதால்
கெட்ட கனவுமாதிரி நினைத்து 
மறந்துவிடச்சொல்லுவார்கள்.
சில ஏற்கவியலாத கனவுகளைக்கூட
அப்படித்தான் செய்யவேண்டும் போல...


03.12.2006


சிதைவு (2)


எங்கு போனது எனது சந்தோஷங்கள்?
எப்போதுமில்லாத அளவுக்கு
சூழலின் நெருக்கடிகள்
நெஞ்சை நெருக்குகின்றன.
வீடு, காதல், வேலை, எதிர்காலம் என
அனைத்துவகையிலுமான ஒரு பயத்தில்
கூனிக்குறுகிக்கொண்டிருக்கிறது
வாழ்நாட்கள்.
எங்கு போனது எனது சந்தோஷங்கள்?
எதனால் இப்படி ஆனது வாழ்வு?
பூவின்மேல் போய் அமரும்
வண்ணத்துப்பூச்சியைப்போல
ஆறுதல் தேடி அலையும் மனசுக்கு
ஒரு இடம் இல்லை இங்கு.
அன்பாக பேசவோ
குறைந்தபட்சம் ஒரு புன்னகை புரியவோகூட
ஒருவரும் இல்லாதமாதிரியாகிவிட்டது.
தோளில்கைபோட்டு
கண்ணீரை சொல்லி நடக்க
நெருங்கிய நண்பன் கூட
தொலைதூரத்தில் இருக்கிறான்.
ஆறுதலாய் இருந்த
தோழியின் நட்பிலும்
விழுந்துவிட்டது ஒரு இடைவெளி.
கடந்துவந்த இத்தனை காலத்திலும்
சொல்லிக்கொள்ளும்படியாக
ஒரு நிகழ்வுகளும் இல்லை இதுவரையில்.
இனியாவது நிகழுமா
மீதமிருக்கிற வாழ்வும்
இப்படியேதான் கடக்குமா...?

10.05.1997

ஜன்னலும் அடிவானத்துப்பறவையும்

















இன்னும் எத்தனை நாளைக்குத்தான்
இந்த கம்பியிட்ட ஜன்னலோடு
கண் பூத்துப்போக
வெளியே வெறித்துக்கொண்டும்
கனவு கண்டுகொண்டும்
காத்துக்கிடப்பது?
நேற்றிரவு இதே ஜன்னலின் அருகில்
உட்கார்ந்திருந்தபோது
தெருவில் பெண்ணழைப்பு ஊர்வலம்
வெகு அமர்க்களமாய் நடந்துபோனது.
அடுத்ததெருவீட்டுப்பையன்
இந்த ஜன்னலை திரும்பிப்பார்க்காமல்
சமீப நாட்களாய்போவதேயில்லை.
ஜன்னலின் அருகே
எப்போது வந்தமர்ந்தாலும்
ஏதாவதொரு பறவை
வெகு தூரத்தில் அடிவானத்துக்கருகில்
பறந்துகொண்டிருக்கும்.
இப்போதுமொரு பறவை
பறந்துகொண்டிருப்பது இங்கிருந்து
மங்கலாகத்தான் தெரிகிறது.