Monday, April 25, 2011

புத்தக திருட்டு



















அப்பாவிடமிருந்து ஏற்பட்டதுதான்
புத்தகம் படிக்கும் பழக்கம்.
பள்ளிக்கூட வாழ்வின் இறுதி நாட்களில்
ஆரம்பித்த இந்த இலக்கிய பரிச்சயம் (பயித்தியம்)
தொட்டு தொடர்ந்து மெல்ல மெல்ல
நேரம், பணம், எதிர்காலம் என
எல்லா விதத்திலேயும் இழந்தாயிற்று
பெரும்பாண்மையான வாழ்வை.

வாங்க இயலாத காலங்களில்
ஆரம்பித்தது திருடும் பழக்கம் .
நூலகங்களில், நணபர்கள் வீட்டில்,
புத்தகக் கடைகளில், கண்காட்சிகளில் என...

சட்டை தூக்கி வயிற்றில் சொருகி
பிள்ளை சுமக்கும் பெண்ணாய்
வலியை அனுபவித்ததுண்டு
நிறைய நாட்களில்.

வயிற்றில் சொருக வசதியாய்
சாப்பிடாமல் கூட போவதுண்டு.
புத்தகம் மேலே தெரியாமல் இருக்க
நூலகம் போகும் போதெல்லாம்
அண்ணனின் சட்டைதான் அடைக்கலம் தரும்.
முட்டிதொடும் சட்டையை
அவமானமாகக் கருதியதே கிடையாது
கல்லூரி படிக்கும் காலத்திலும்.

தினத்துக்கு சராசரியாக
இரண்டு புத்தகங்கள் என
மெல்ல மெல்ல
என்வீடு ஆனது நூலகமாய்...

புத்தகங்களோடு திரும்பும்
எந்த ஒரு நாளும்
அன்போடு,
அன்போடு என்ன
சோறே போட்டதில்லை அம்மா.
" பொழைகிற வழியைப்பாக்காம
அப்பனும் புள்ளையுமா சொத்து சேக்கரானுங்க"

இதே புத்தகத்தால்
எனக்கும் அப்பாவுக்குமான
ஒரு கார்த்திகை தீபத்தின்
மழை இரவுசண்டையில்
போதுமடா சாமி
என்ன பொழப்பு இதுவென
மொத்தமும் விட்டு விட்டு (மனசில்லாமல்)
ஊர்தாண்டி ஊர் வந்தாயிற்று
அம்மா சொன்ன மாதிரி
பொழைக்கிற வழியைப்பார்த்து.

ஆண்டுகள் கடந்த நிலையில்
எதேச்சையாய் அண்மையில்
அனைத்து புத்தகங்களையும்
ஒரு சேர பார்க்கும் வாய்ப்பு
அமைந்ததது.
எலும்புத்துண்டு பார்த்த நாயாய்
அலைந்தது மனம்.

மறுபடியும்
வேதாளம் முருங்கைமரம் ஏறியது.
ஊருக்கு போன சமயம்
வெகுநாட்களாக போகமலிருந்த
நூலகங்களில் புதுப்புத்தகங்களின்
வருகை அதிகரித்திருந்தது.

வழக்கமாய் சட்டை தூக்கி
வயிற்றில் இரண்டு சொருகும்போது
விட்டுப்போன பழக்கத்தால்
ஒரு பக்கம் விலா இழுத்துக்கொண்டது.

No comments:

Post a Comment