Wednesday, August 31, 2011

பழனி மலையின் அடிவாரத்தில் ஒரு நாள்





கடந்த ஞாயிற்றுக்கிழமை (28.08.11) காலையிலே நணபர்களுடன் கிளம்பினோம்.
பழனி தாண்டி நெய்க்காரப்பட்டியையும் தாண்டி கரடிக்கூட்டம் ரோட்டிலே (ஊர்ப்பெயர்களை கவனிக்கவும்) சென்றால் மலையடிவாரத்தில் 7 ஏக்கர் கரும்புத்ேதாட்டம் வாங்கியிருக்கிறார் நண்பரின் நண்பர்.

அந்த தோட்டத்தில் அன்று கிடா வெட்டு. இடம், சூழல், காற்று என எல்லாமே அற்புதமாக இருந்தது.
சற்றே நடந்து எட்டி ஏறிவிடும் தூரத்தில் இருந்தது மலை. வெகு நேரம் மலையையே பார்த்துக்கொண்டிருந்தேன். அப்படி அவ்வளவு நேரம் பார்க்க அதில் என்ன இருக்கிறது என்று உடன் வந்த நண்பர்கள் கேட்டார்கள். நான்
பதிலேதும் சொல்லவில்லை. பதில்சொல்லக்கூடிய நண்பர்கள் உடன் வரவில்லை.
சுற்றி சுற்றி நடந்து வந்தேன். காற்றை முடிந்த மட்டும் நுரையீரலில் சேமித்துக்கொண்டேன்.
ஒரு சிறு ஓலைவேந்த வீடு காவல்காரருக்கு அந்த தோட்டத்தில் இருந்தது. அவருக்கு துணையாக இரண்டு வாட்டசாட்டமான நாட்டு நாய்கள் இருந்தன. எதற்கு என கேட்டபோது இரவில் காட்டுப்பன்றிகள் வரும்போது
இந்த நாய்கள் தான் துரத்தியடிக்கும் எனவும், காட்டுப்ன்றிகளை வேட்டையாட
போகும் போதும் இந்த நாய்கள்தான் பெரும் உதவியாக இருக்கும் எனவும் சொன்னார்கள். மேலும் யானைகள் நிறைய வரும் என சொன்னபோது கரும்பையெல்லாம் விட்டுவைக்காதே என நான் கேட்டபோது இந்த காட்டுல அந்த யானைங்க எடத்துல வந்து நாம பயிர்செய்யறோம் அதுகளுக்கு போன மிச்சம்தான் நமக்கு என்றார்.
நாள்முழுவதும் அங்கேயே இருந்தோம். நிறைய சாப்பிட்டு அரட்டையடித்து படுத்து தூங்கி எல்லாவற்றையும் மறந்து ஏதோ தனி உலகத்தில் இருந்த மாதிரி
இருந்துவிட்டு வேறு வழியில்லாமல் ஊர் நோக்கி வந்து வீட்டில் படுத்த போது
நேரம் நள்ளிரவு தாண்டியிருந்தது. மனம் மட்டும் மலையைநோக்கி பறந்தபடியே இருந்தது.


No comments:

Post a Comment