Monday, August 22, 2016

கரைசேரும் முகங்கள்

அண்ணனிடமிருந்து 
அலைபேசியில் அழைப்பு வரும்.
.... "நம்ம எதிர்வீட்டு சேகரோட சித்தப்பா
நெட்டப்பாக்கத்தில இருந்தார் தெரியுமாடா"?.... என்று
கேட்கும்போதே கறுக்கென்றிருக்கும்.
..."அவரு நேத்து வெடிகாலையில 
பால்வாங்க போகும்போது லாரிகாரன் அடிச்சு
அதே இடத்துல"...

இப்படியாக
இரண்டு வருடங்களுக்கு முன்பு
இதே மாதிரி அகால மரணமடைந்த 
சோரியங்குப்பத்து தாய் மாமன் முதல்
நான்கு நாட்களுக்கு முன்பாக
படுத்த படுக்கையாய் இருந்து இறந்த
எங்கள் தெருவின் முன்னாள் தர்மகத்தா 
தனபால் மேஸ்திரி...
எப்போதும் அமைதியே உருவாய்க்கொண்ட
உமாமதி சித்தப்பா...
அடுத்தவாரமே அவர் மனைவி....

ஊருக்கு போகும்சந்தர்ப்பங்களில்
"நான் செத்தா வந்து பாப்பியாம்மா" என்று
முகம் வருடி வேதனையுடன் கேட்ட 
மனைவியின் பாட்டி என
சொல்லிக்கொண்டே போகலாம்.

நீரில் விழுந்த பொருள் மெல்ல மெல்ல
கரைசேர்வது மாதிரி
சின்ன வயசிலிருந்து 
பார்த்து, பேசி, பழகி, உறவாடிவந்த
பல அற்புத மனிதர்களின் முகங்களை
கரைசேர்ந்த நேரத்தில்
இறுதியாகப்பார்க்கும் பாக்கியம் கூட
வாய்க்காத தொலைதூர வாழ்க்கை
வாய்த்து தொலைக்காமல்
போயிருந்தால்தான் என்ன?

(தனபால் மேஸ்திரிக்கு ....)

No comments:

Post a Comment